ப.திருமாவேலன்,
சோனியாவை 'சொக்கத் தங்கம்’ என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார் முதல்வர் கருணாநிதி. ஆனால், 'ஊழல் உலோகம்’ என்று சோனியாவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் டெல்லிப் பத்திரிகையாளர்கள்.
125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி, இன்று நித்தமும் ஊழல், முறைகேடுகளுக்கு விளக்கம் சொல்வதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கிறது. வெள்ளையர் களை விரட்டியதே இவர்கள் பங்கு பிரிக்கத் தானோ என்று அச்சம்கொள்ளும் அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன. ஊழலே நடக்காமல் தடுக்க, சோனியாவால் முடியாது. ஆனால், அது வெளிச்சத்துக்கு வந்த பிறகேனும், உறுதியான நடவடிக்கை களை எடுத்திருக்க வேண்டும். நடவ டிக்கை எடுக்காதது மட்டுமல்ல; அதை மறைக்கும் காரியங்களும் சோனியா ஆசீர்வாதங்களுடன் நடப்பதுதான் இந்திரா காங்கிரஸுக்கு 'கரப்ஷன் காங்கிரஸ்’ என்று பட்டம் சூட்டக் காரணமாகிறது!
'ஊழலைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஊழல் மற்றும் தவறான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அதைப் பொறுத்துக் கொள்ளாது. அதிகப்படியான எளிமை யும் கட்டுப்பாடும் நம்முடைய வழி களாக இருக்க வேண்டும். அதிகப்படியான சொத்துக்கள் மற்றும் வசதி வாய்ப்பைவெளிப் படுத்தும் வகையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதன் மூலம் மற்றவர்கள் கண்களை உறுத்துவதையோ, மற்றவர்க்குப் பொறாமை ஏற்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. பொது வாழ்வில் ஈடுபடுவோர், அரசியல் வாதிகள் மீதான அனைத்து ஊழல் வழக்கு களும் குறிப்பிட்ட காலத்துக்குள்விசாரிக்கப் பட வேண்டும்!’ - சொன்னவர் மகாத்மா காந்தி அல்ல; சோனியா காந்தியேதான்!
30 நாட்களுக்கு முன் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் இப்படி முழங்கி னார் சோனியா. ஆனால், இந்த ஒரு மாதத்துக் குள் காங்கிரஸுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் முடிந்த அளவுக்கு ஆறப் போட்டுவைக்கவும் காரணம், இதே சோனியாவே!
நம்பர் 10, ஜன்பத் வீட்டு ஊறுகாய்ப் பானைக்குள் ஊறப்போடப்பட்டுவிட்ட வழக்குகளின் கதையைவைத்து ஊழல் பாரதம் படைக்கலாம். ஸ்பெக்ட்ரம் முதல் போஃபர்ஸ் வரை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தேய்பிறை ஆகிக்கொண்டே இருக்கின்றன!
புஸ் ஆகும் ஸ்பெக்ட்ரம்!
இந்திய தேசம் இதுவரை சந்திக்காத மிகப் பெரிய அவமானம்... ஸ்பெக்ட்ரம் 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். அரசாங்கக் கணக்குக்கு வந்தாக வேண்டிய பணத்தைச் சில தனி மனிதர்கள் தங்களது சொந்த சுக போகங் களுக்குத் திருப்பிக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய தாக்கீ தாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தந்தது.
'சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது!’ என்று அவர்கள் குற்றம்சாட்ட... அதில் முகாந்திரம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரதமர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்குக் கட்டளை இட்டார். ஓர் ஆண்டு காலம் அவர்கள் 'அமைதியாக’ விசாரித்து வந்தார்கள். அதற்குள் மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. 'முறைப்படி, விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றி இந்த அலைக்கற்றைகளைக் கொடுத்து இருந்தால், 1.76 லட்சம் கோடி வரை அரசாங்கத்துக்கு லாபம் கிடைத்திருக்கும்!’ என்று சி.ஏ.ஜி. கூறியது. எதிர்க் கட்சிகள் இதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டன.
நாடாளுமன்றத்தை நடத்த முடியாத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் நாறியது. அந்தத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்தார்கள். எதிர்க் கட்சிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் இதன் மூலம் அமைதியாக்கிவிட காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா முதல் அவரது பினாமிகள் வீடுகள் வரை சி.பி.ஐ. ரெய்டு போனது. அவரே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாமே டிசம்பர் சீஸனாக முடிந்து போனது.
''அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசாங்கத் துக்கு ஒரு பைசாகூட இழப்பு இல்லை!'' என்று பேச ஆரம்பித்தார், ராசாவுக்குப் பிறகு அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கபில்சிபல். ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று நவம்பர் மாதம் மீடியாக்களிடம் கர்ஜித்த கபில்சிபலின் வார்த்தைகள் ஜனவரியில் தேய்ந்தன. இந்த நிறுவனங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி ஃபைன் போடப்பட்டதாகவும், அதை அவர் கள் உடனே செலுத்தியதாகவும் கணக்குக் காட்டினார் கபில்சிபல். 'ஃபைன் கட்டியதால் பிரச்னை முடிந்தது’ என்றார்.
இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை யில் விசாரணைக் கமிஷனை அமைத்தார் பிரதமர். நீதிபதிக்குத் தரப்பட்ட கால எல்லை முடிந்த பிறகும் அறிக்கை வரவில்லை. இந்த லைசென்ஸை வாங்கித் தரும் புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியாவின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள்பற்றி, அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரிடம், அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவிட்டார். அந்த அறிக்கையும் வந்ததாகத் தெரியவில்லை. ரெய்டு அடித்த களைப்பில் இருந்து இன்னமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீளவில்லை. அவர்கள் மத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது.
தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி முடிவானதால், இந்த வழக்கு முடக்கப்பட்டதா அல்லது சுப்பிரமணியன் சாமி சொல்வதைப்போல, சோனியாவின் சகோதரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கேள்வியில் புஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம்!
காணாமல் போகும் காமன்வெல்த்!
உலகம் முழுக்க நம் புகழ் பரப்ப நடத்தப் பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யால், இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் எந்த அளவுக்குத் தலை விரித்து ஆடுகின்றன என்பதை வெளிச்சப்படுத்திக்கொண்டோம். டெல்லியை அழகுபடுத்துவதில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தின் கழிவறைகள் வரை எல்லாவற்றிலும் கரன்சியை அமுக்கினார்கள்.
இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்த சுரேஷ்கல்மாடி முதல், டெல்லி மாநில முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வரை அனைத்துமே காங்கிரஸ் தலைகள் பெயரே அடிபட்டது. ஒரு பாலம் கட்டுவதற்கு சுமார் 300 கோடி ஆகும் என்றால், இவர்கள் கணக்குப்படி ஒரு பாலத்தைச் சீரமைக்கவே 500 கோடி வரை செலவானது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட் களையும், அடக்க விலையைக் காட்டிலும், 60 முதல் 100 மடங்கு வரை அதிக வாடகைக்கு எடுத்தார்கள். எல்லாமே கமிஷன்... எங்கு திரும்பினாலும் பினாமிகள்... என்ற குற்றச் சாட்டுகள் காமன்வெல்த் போட்டி தொடங்கும் முன்பே வெளியில் வந்தன. அமைதி காத்த சோனியா, போட்டிகள் முடிந்த பிறகு சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுத்தார். சிலர் கைதாகினர். ஆனால், கல்மாடி கைதாகவில்லை. அனைத்துக்கும் காரணமான அவர் காப்பாற்றப்பட்டார். இன்று வரை காங்கிரஸ் எம்.பி-யாகவே அவர் தொடர்கிறார். இத்தனைக்குப் பிறகும், 'நான் நிரபராதி’ என்று பேட்டிகள் தந்துகொண்டு இருக்கிறார்.
அவரை மட்டுமல்ல; அந்த வழக்கையே ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்காகத் திரை மறைவுக் காரியங்கள் நடக்கின்றன. அதில் முக்கியமானது, காமன்வெல்த் தொடர்பான ஆவணங்களையே காணாமல் அடித்துவிட்டது!
ஊழல் நடந்ததை நிரூபிக்கத் தேவையான டெண்டர் கோருதல், பட்ஜெட் ஒதுக்கீடு, ஒப்பந்த விவரம் ஆகிய மூன்று ஆவணங்களையும் காணவில்லை. பிறகு, எதைவைத்து குற்றச்சாட்டை நிரூபிப்பார்கள்? 'அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு இந்த ஆவணங்களை கல்மாடி அனுப்பிவைத்துவிட்டார்’ என்று பெயர், முகவரியுடன் டெல்லி பத்திரிகைகள் எழுதிய பிறகும் காங்கிரஸ் அமைதி காக்கிறது!
'தாமஸ் நல்லவர்!’
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையம் எனப்படும் விஜிலென்ஸ் கமிஷனர்தான் இந்தியாவின் எந்தப் பாகத்திலும் எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்புகொண்டவர். அந்தத் துறை ஒழுங்காகச் செயல்பட்டு இருந்தால், நாட்டில் இந்த அளவுக்கு முறை கேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த ஆணையத்தின் கமிஷனராக தாமஸ் என்பவரை நியமித்தபோது, நண்டைச் சுட்டு நரியைக் காவல்வைத்த கதைதான் நினைவுக்கு வந்தது. கேரள மாநிலத்தின் சிவில் சப்ளைஸ் கமிஷனராக இருந்தபோது, பாமாயில் இறக்குமதி தொடர்பாக இவர் மீது குற்றச் சாட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கேரள அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்ன தாகவே வெளிநாட்டு கம்பெனியில் இருந்து இவர் வாங்கிவிட்டதாக சந்தேக ரேகை படிந்தது. அது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. அப்படிப்பட்டவரை விஜிலென்ஸ் கமிஷனராக எப்படி நியமிக்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி.
இந்தப் பதவிக்கு வரக்கூடியவரை பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஆகிய மூவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், தாமஸின் நியமனத்தை எதிர்த்தார். ஆனாலும், மீறி நியமிக்கப்பட்டார் தாமஸ். உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகாவது, அவரை நீக்கி வேறு ஒருவரை நியமித்து இருக்கலாம். ஆனால், சோனியாவின் பாதுகாவலரான ஜார்ஜ் மூலமாகப் பதவியைப் பிடித்தவர் தாமஸ் என்பதால், அது நடக்காமல் போனது. 'தாமஸ் சிறந்த நிர்வாகி. இம்மாதிரியான பதவியில் நியமிக்கப்படுபவரின் தகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்க முடியாது!’ என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஓர் அரசாங்கத்தின் நியாய தர்மங்கள் எந்த அளவுக் குத் தரம் தாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதற்கு தாமஸ் நியமனம் ஒரு சாட்சி!
வீட்டை இடித்தால் மட்டும் போதுமா?
நாட்டைக் காக்க உயிரைக் கொடுத்த தியாகி களின் வயிற்றில் அடித்த விவகாரம்தான் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்!
கார்கில் போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு மும்பை கொலபா கடற்கரையில் வீடுகள் கட்ட அனுமதி தரப்பட்டது. 31 வீடுகள் ராணுவ வீரர்களுக்கும், ஒன்பது வீடுகள் பொதுமக்களுக்கும் கட்ட அனுமதி தரப்பட்டது. ஆறு மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாது என்பது விதி. அதை மீறி, வீட்டு எண்ணிக்கையை 71 ஆக்கினார்கள். அதன் பிறகு 91 ஆகக் கூட்டினார்கள். 6 மாடிகளை 31 மாடி களாக உயர்த்தினார்கள். மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு இந்தக் காரியங்களைத் தடையில்லாமல் செய்துகொடுத்தது. அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவத் தளபதிகளின் உறவினர்கள், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் சொந்தங்கள் என்று உள்ளே புகுந்து வீடுகளைக் கைப்பற்றி னார்கள். கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டதைவிட... தார்மீக நெறிமுறைகள் காற்றில் பறந்தன. பத்திரிகைகள் தொடர்ச்சியாக எழுதியதற்குப் பிறகு, அசோக் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விதிமுறைகளை மீறியது உண்மைதான் என்பதை உணர்ந்து, 31 மாடிக் கட்ட டத்தை முழுமையாக இடிக்க மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.
'விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்த பிறகு, அவ்வளவுதானே... இந்த விசாரணைகளை நிறுத்தி விட வேண்டியதுதானே?’ என்று காங்கிரஸ் தலைவர்கள் மெதுவாக முணு முணுக்கத் துவங்கி இருக்கிறார்கள்!
காப்பாற்றப்படும் கறுப்பு மனிதர்கள்!
நேர்மையாளர் என்ற மன்மோகன் சிங்கின் முகத்திரை கறுப்புப் பணக் குவிப்பு விஷயத்தில் கிழிந்தது. மேற்கு ஐரோப்பிய நாடான வீக்டென்ஸ்டைன், வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும். அங்கு இருக்கும் சுவிஸ், ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் யாரும் எவ்வளவு முதலீடும் செய்யலாம். அதற்கு கணக்குக் கேட்க மாட்டார்கள். அங்கு உள்ள எல்.டி.ஜி. வங்கியில் பணம் போட்டு உள்ளவர்களின் விவரங்களை ஜெர்மன் நாடு வாங்கி உள்ளது. அவர்களிடம் இருந்து நம்முடைய மத்திய அரசு பெற்றுள்ளது. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி வழக்குப் போட்டார். 'நாட்டின் வளத்தைச் சூறை யாடிப் பதுக்கியவர்களின் பெயர்களை எப்படி மறைக்கலாம்?’ என்று கேட்கிறது நீதிமன்றம். 'பெயரை வெளியிட மாட்டோம் என்ற உத்தர வாதத்தின் அடிப்படையில்தான் வாங்கி இருக் கிறோம்!’ என்று மழுப்புகிறது மத்திய அரசு.
'வரி வசூல் செய்வதற்காகத்தான் இந்தப் பெயர்கள் வாங்கப்பட்டுள்ளன!’ என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை வெளியில் சொல்ல இவர்களால் முடியாது. ஏனென்றால், அந்த மனிதர் களின் தயவில்தான் காங்கிரஸ் கட்சியே இயங்கி வருகிறது என்று ராம் ஜெத்மலானி போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
போஃபர்ஸ் பீரங்கியும் இத்தாலி மாஃபியாவும்!
ராஜீவ் படத்தை வரைந்து 'பீரங்கித் திருடன்’ என்று தி.மு.க. பிரசாரம் செய்த இந்த வழக்குக்கு வயது 20. ஆனால், வழக்கு இன்னும் முதல் படியைக்கூடத் தாண்டவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குவாத்ரோச்சி. இவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி, வழக்கை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக்கொண்டது சி.பி.ஐ.
இதைக் கேட்டதும் நீதிபதி வினோத் யாதவ் ஆடிப்போய்விட்டார். 'சி.பி.ஐ. இப்படிச் செய்வதற்குத் தவறான உள்நோக்கம் இருக்க வேண்டும்!’ என்றார். எந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராஜீவ் காந்தி இந்தியா முழுவதும் தேர்தலில் தோற்றாரோ... அந்த வழக்கு இன்று அநாதையாக நின்றுகொண்டு இருக்கிறது. அஜய் அகர்வால் என்ற ஒரு தனி மனிதர் மட்டுமே இதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்த வழக்கை மறைக்கக் காரணம், ராஜீவ் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல. சோனியாவுக்கு நெருக்கமானவர் குவாத்ரோச்சி என்பதும் ஓர் அடிப்படைக் காரணம். 'ஆதாரம் இல்லை’ என்று சி.பி.ஐ. சொல்வதும் இதனால்தான்.
ஒரு காலத்தில் இத்தாலிதான் மாஃபியாக்களின் தலைமையிடம் என்பார்கள். சமீப கால இந்திய நிகழ்வுகள் அதை உண்மை என்று நம்பத் தூண்டுகிறது!